வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே ( வந்தே)
ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ?
சீனத்த ராய்விடு வாரோ ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ ? ( வந்தே )
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ (வந்தே )
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் -இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெதுவேண்டும் ( வந்தே )
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவருக்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் ( வந்தே)
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கிளிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர -இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி ( வந்தே )