முரசு !!!

வலிமை உடையது தெய்வம் - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் ;
மெலிவு கண்டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ ?


அன்பென்று கொட்டு முரசே ! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு ;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

பாருக்குள்ளே சமத் தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரர் தன்மை
யாருக்கும் தீமை செய் யாது -புவி
யெங்கும் விடுதலை செய்யும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம் ;
பயிற்றுப் பல கல்வி தந்து -இந்தப்
பாறை உயர்த்திட வேண்டும்

ஒன்றென்று கொட்டு முரசே - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே !
நன்றென்று கொட்டு முரசே - இந்தப்
நானில மாந்தருக்கெல்லாம் !!

1 comments:

Guru Prasad Pandurengan said...

தங்களுக்கு இந்த வலைதளம் உதவும் என எண்ணுகிறேன்.

http://www.projectmadurai.org/pmworks.html

வாழ்த்துக்கள்.