நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி சிவசக்தி !- நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையறு பந்தினைப்போல் -உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

நசையறு மனங்கேட்டேன் -நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் -சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

அசைவறு மதிகேட்டேன் -இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்

சிந்தனை மாய்த்து விடு ;

யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்

ஊனைச் சிதைத்துவிடு ;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன

யாவையும் செய்பவளே !

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்

பாரத்தைப் போக்கிவிடு ;

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்

செத்த உடலாக்கு .

இந்தப் பதர்களையே நெல்லா மென

எண்ணி இருப்பேனோ ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று

இயங்கி யிருப்பவளே .

உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ

ஊனம் ஒழியாதோ ?

கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்

கண்ணீர் பெருகாதோ ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்

மேவி யிருப்பவளே !

கண்ணம்மா என் காதலி - 1

காட்சி -வியப்பு

செஞ்சுருட்டி -ஏகதாளம்

ரசங்கள் - சிருங்காரம் ,அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ ?

வட்டக் கரியவிழி கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல் வயிரம்

நட்டு நாடு நிசியில் தெரியும்

நக்ஷத்திரங்க ளடீ !

சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகையோ தான் ?

நீலக் கடலலையே உனது

நெஞ்சி லலைக ளடீ !

கோலக் குயிலோசை உனது

குரலினிமை யடீ !

வாலைக் குமரி யடீ - கண்ணம்மா !

மருவக் காதல் கொண்டேன்

சத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா !

சாத்திர மேதுக் கடீ

ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா

சாத்திர முண்டோ டீ !

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி ! இது பார்

கன்னத்து முத்த மொன்று !