பெண் விடுதலை

விடுதலைக்கு மகளிரெல் லோரும்

வேட்கை கொண்டனம் ;வெல்லுவம் என்றே

திடம னத்தின் மதுக்கிண்ண மீது

சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்

உடையவள் சக்தி ஆண்பெண் ணிரண்டும்

ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்

இடையிலேப்பட்ட கீழ்நிலை கண்டீர்

இதற்கு நாமொருப் பட்டிருப் போமா ?

திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ;

குறைவி லாது முழு நிகர் நம்மைக்

கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்

சிறுமை தீர நந் தாய்த்திரு நாட்டைத்

திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்

அறிவிழந்தது பண்டை வழக்கம்

ஆணுக் குப்பெண் விலங்கெனும் அக்தே

விடியும் நல்லொளி காணுதி நின்றே ,

மேவு நாக ரிகம்புதி தொன்றே,

கொடியர் நம்மை அடிமைகள் என்றே ,

கொண்டு தாம் முதல் என்றன ரன்றே ,

அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே ,

அறிவு யாவும் பயிற்சியில் வென்றே

கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்

காரிகைக் கணத்தீர் துணிவுற்றே .

கண்ணம்மா எனது -குல தெய்வம்

ராகம் -புன்னாகவராளி

பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் -கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

(நின்னை )
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன ,கொன்றவை போக்கென்று

(நின்னை )

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்

(நின்னை )

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

(நின்னை )

நல்லது தீயது நாமறியோம் அன்னை !
நல்லது ! நாட்டுக தீயதை ஓட்டுக !

(நின்னை )

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு ; தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

பாரதியின் கடிதங்கள்

பாரதியின் கடிதங்களை பற்றி எஸ் ராமகிருஷ்ணன் எழுதி இருந்ததை நான் முன்பு என் அறுந்தபட்டம் பதிவில் சொல்லி இருந்தேன்.அவர் தொகுத்து இருந்த கடிதங்கள் இதோ.
கடிதம் -1 - 1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.
(கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)

ஒம் ஸ்ரீகாசி ஹனுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷ முறுவேன்
உனதன்பன் சி.சுப்ரமணியபாரதி****
___________________________________________________________________
கடிதம் 2 எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919
கடயம். 30 ஜனவரி. 1919
ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்
இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.
இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்
உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக
உனதன்புள்ள
சி. சுப்ரமணிய பாரதி.

( இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.)

_____________________________________________________________________
கடிதம் 3 பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு கடிதம் 1915

ஒம் புதுச்சேரி
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக

தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,
அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்
தம்பி - நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி - உள்ளமே உலகம்

ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ ! பற. ! பற ! - மேலே மேலே! மேலே! **

தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது
பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது
தொழில்கள், தொழில்கள் என்று கூவு
தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு
தம்பி - நீ வாழ்க

**உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.
உனதன்புள்ள பாரதி**

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்இனிதாவ தெங்குங்
காணோம்பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்இகழ்ச்சிசொலப் பான்மை
கெட்டுநாமமது தமிழரெனக்
கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப்
போல்பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் , ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்

விடுதலை!

விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே.